வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் 3ம் நாள் இன்றாகும். அதிகாலை 4.30 மணி திருப்பள்ளி எழுச்சிப் பூசையுடன் எம் பெருமானின் அன்றாடப் பூசைகள் யாவும் திருவிழாக்கால சிறப்புடன் இனிதே இடம்பெற்றது.
தவில் நாதஸ்வர இன்னிசை மழை அடியவர்களின் செவிகளுக்கு விருந்தூட்ட பகல் 10.15 மணிக்கு ஆலய மணி ஓசை எட்டுத்திக்கும் பரவ ஆலயத்தினுள்ளே எம்பெருமானின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு ஆலய பிரதம சிவாச்சாரியார் அவர்களால் பூசை வழிபாடுகளை சிறப்புற செய்யப்பட்டது.தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்றதை அடுத்து வேல் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீற்று சிவப்பு பட்டாடை அணிந்து சிவப்பு குடையின் கீழ் சிவப்பு மஞ்சள் வெள்ளை நிற மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு வேண்டி வந்த அடியவர்க்கு வேண்டும் வரமளித்து உள் வீதி முழுவதும் அருட்காட்சி கொடுத்து வசந்த மண்டபத்தை அடைந்தனர்.
கந்தனின் அடியவர்களிற்கு அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.காலை மதியம் மாலை என மூன்று வேளையும் தண்ணீர்ப்பந்தல்களில் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.
மாலை பூசை வழிபாடுகள்சிறப்புற நடைபெற்றதை அடுத்து தவில் நாதஸ்வர இன்னிசை மழை பொழிய 4.30 மணிக்கு ஆலய மணி எங்கும் ஒலிக்க வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை தீபராதனைகள் வழிபாடுகள் , கொடித்தம்ப வழிபாடுகளும் சிறப்புற இடம்பெற்றது. 5.00 மணியளவில் எழுந்தருளித் தெய்வங்களான வேல்,வள்ளி தெய்வானை வெள்ளி மயில்,வெள்ளி அன்ன வாகனத்தில் நீல நிறப்பட்டாடை அணிந்து நீல நிறக்குடைகளுடன் பல வர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள் வீதியில் எழுந்தருளி 5.45 அளவில் வெளி வீதி வந்தடைந்து 6.30 மணியளவில் ஆலயத்திற்குள் சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனார். 6.45 மணி அர்த்தயாம பூசையுடன் 3ம் நாள் திருவிழா இனிதே நிறைவுற்றது.
ஆலயத்தை சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாளைய தினம் காலை 10.15 மணிக்கு வசந்தமண்டப பூசையும் மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசையும் இடம்பெறும்.